சூரிய உதயத்தால் இலங்கைக்கு தினம் 3ஆயிரம் டொலர் வருமானம்

சிகிரியாவில் சூரிய உதயத்தைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலமாக நாளொன்றுக்கு மூவாயிரம் டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைப்பதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த மத்திய கலாசார நிதியத்தின் டொலர் உற்பத்தி தற்போது 614% ஆக அதிகரித்துள்ளதாக்க நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சிகிரியாவில் சூரிய உதயத்தை காணக்கூடிய சந்தர்ப்பத்தினை அறிமுகப்படுத்திக் கொடுத்ததனால் நாளொன்றுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்படுகிறது.

மேலும் சிகிரியாவைச் சுற்றியுள்ள இடங்களில் சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வகையில் புதிய துறைகளைக் கண்டறிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமய விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு தொடர்பாக நாடாளுமன்றில் கூடிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரிய நிறுவனமான கொய்கா (KOICA) இந்தத் திட்டத்திற்காக 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.