நேற்றிரவு பதிவான துப்பாக்கிசூடு : கெஹெல்பெத்தரவின் நெருங்கிய சகாவே தாக்குதலுக்கு இலக்கு



வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்  கெஹெல்பெத்தர பத்மேயுடன் நெருங்கிய தொடர்புடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரலியகஸ்தெக்க சந்திக்கருகில் நேற்றுஇரவு காரில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை இலக்குவைத்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காரில் பயணித்த நபரின் இடக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அந்நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதுடைய உடுகம்பொல பகுதியை சேர்ந்த வினோத் தில்ஷான் என்ற நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார். கைத்துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதாள உலகக் குழு தலைவரான  கெஹெல்பெத்தர பத்மேயுடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்குடன் சம்பவம் இடம் பெற்றிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடகை கார் சாரதியாக குறித்த நபர் பணிபுரிந்து வந்துள்ளதுடன், அவரிடம் இருந்த காரும் வாடகைக்கு பெறப்பட்டதெனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை சம்பவத்தன்று காரின் உரிமையாளர் காயமடைந்த நபரை தொடர்பு கொண்டு, வெலிவேரிய பகுதியில் உள்ள சுற்றுலா பயணி ஒருவரை காலிக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அப்பகுதிக்கு சென்றிருந்த போதே, இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் காயமடைந்த நபருக்கு எதிராக எவ்வித வழக்குகளும் பதியப்படவில்லை எனவும் தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்ய வெலிவேரிய பொலிஸார் உள்ளிட்ட மூன்று விசாரணைக்குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.