மின்கட்டணத்தை 7 சதவீதத்தால் உயர்த்த உள்ளதாக அதிர்ச்சி தகவல்



மின்சார சபையின் நட்டத்தை மின்பாவனையாளர்கள் மீது சுமத்தும் வகையில் மீண்டும் மின்கட்டணத்தை 7 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்த அவர்,


இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் யோசனையை 2002 ஆம் ஆண்டு  அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்தார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் யோசனைக்கு ஜேவிபி தான் ஆரம்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

மின்சார சபையை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஜேவிபி, மின்சார சபை தொழிற்சங்க உறுப்பினர்களிடமிருந்து ஒவ்வொரு மாதம் தலா 200 ரூபாவை பெற்றுக்கொண்டு அதனை தமது கட்சியின் வங்கி கணக்கில் வைப்பிட்டது.

2015 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடும் அழுத்தம் பிரயோகித்து ஜேவிபி  தமது 6000 ஆதரவாளர்களை இலங்கை மின்சார சபையில் இணைத்துக் கொண்டது.
ஜேவிபி ஒவ்வொரு மாதமும் தம்மிடமிருந்து 5000 ரூபாய் அறவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார உட்பட அரசாங்கம் மின்சார சபையின் சேவையாளர்களை அச்சுறுத்துவதற்கு முன்னர் மக்களிடம் மன்னிப்பு கோரி சுமார் 25 ஆண்டுகாலமாக தமது மின்சார தொழிற்சங்கத்தினரிடம் சேகரித்த நிதியை அவர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.

விலைமனுகோரலின் போது முறையற்ற வகையில் செயற்பட்டு அரசுக்கு சுமார் 85 இலட்சம் ரூபாய் நட்டஈடு ஏற்படுத்திய நபரையே வலுசக்தி அமைச்சராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.இவ்வாறான நிலையில் எவ்வாறு ஊழலற்ற நாட்டை உருவாக்க  முடியும் என கேள்வி எழுப்பினார்.