க்ளப் வசந்த படுகொலை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்! உண்மைகளை அம்பலப்படுத்தும் மனைவி

கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி இலங்கையை உலுக்கிய மிகக் கொடூர கொலை சம்பவம் தான் க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம்.

அத்துருகிரிய பிரதேசத்தில், பச்சைக் குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவுக்காக தனது மனைவி சகிதம் சென்றிருந்த க்ளப் வசந்த அங்கு வந்த ஆயுததாரிகள் சிலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இதன்போது, பிரபல பாடகி சுஜீவாவின் கணவரும் உயிரிழந்த நிலையில், பாடகி சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்திருந்தனர்.

மேலும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து KPI என்று எழுதப்பட்ட தோட்டாக்களையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.

இந்த சம்பவம், அதன் பின்னரான நாட்களில்  இலங்கையில் பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக, பல சர்ச்சைகளை தோற்றுவித்த சம்பவமாகவும் க்ளப் வசந்த படுகொலை அமைந்தது.

க்ளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த பச்சைக் குத்தும் நிலையத்தின் உரிமையாளர் அழுது புலம்பி கண்ணீர் விட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பல நாட்களாக அதிகமாக பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டன. எவ்வாறாயினும், பின்னர் அவரும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு முக்கியப் புள்ளி என தெரியவந்தது. அத்துடன் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், க்ளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற போதும் கூட பல அச்சுறுத்தல்கள் இருந்தது தொடர்பில் செய்திகள் வெளிவந்திருந்தன..

இந்தநிலையில், பல மாத சிகிச்சைகளுக்குப் பிறகு க்ளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன தனது கணவர் கொல்லப்பட்ட தினத்தன்று நடந்த விடயங்களை நேர்காணல் ஒன்றின் ஊடாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர் விபரிக்கையில்,

“அன்று நடந்த சம்பவம் என்னை முற்றாக நிலைகுலைய வைத்தவிட்டது. அதனை மறக்க நினைத்தாலும் என் நினைவில் அந்த சம்பவம் மட்டுமே இருக்கின்றது.

என்னால் பல மாதங்கள் உறங்கமுடியவில்லை. எனக்கு பயமாக இருக்கும். அதனால் நான் கண்ணை மூடுவதில்லை. கண்ணை திறந்து வைத்துக் கொண்டு காத்திருப்பேன். உண்ணவும் முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது.

கடந்த ஜூன் மாதம் இறுதியில், என்னுடைய வியாபாரம் சம்பந்தமாக நான் துபாய்க்கு சென்று திரும்பியிருந்தேன். நான் நாடு திரும்பி சில நாட்களின் பின்னர் என்னுடைய கணவர் வசந்த பெரேரா, என்னிடம் பச்சைக் குத்தும் நிலைய திறப்பு விழா ஒன்று இருக்கின்றது. அங்கு நாம் செல்ல வேண்டும் என கூறினார்.

இதனையடுத்து தான் நான் அந்த அழைப்பிதழைப் பார்த்தேன், அதில் எங்கள் இருவரது புகைப்படங்களை அச்சிட்டு அழகான அழைப்பிதழ் ஒன்று எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

எனினும், நான் எனது கணவரிடம் கேட்டிருந்தேன், பாதுகாப்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளார்களா, நாங்கள் அங்கு செல்லும் போது பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினேன்.

ஆனால், எனது கணவர் நாம் செல்லப் போவது சாதாரண ஒரு மனிதரின் கடைத் திறப்பு விழாவுக்கு, முன்னேற வேண்டிய ஒருவர், நாங்கள் சென்று அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து உதவுவோம். காணொளி ஒன்று பதிவிட்டு அவருக்கு நாங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கூறினார்.

ஆனாலும், பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொண்டு செல்லலாம் என்று பல முறை வலியுறுத்தினேன். எனினும், சாதாரண மனிதர்களிடம் இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல என்று என்னை சமாதானப்படுத்தினார்.

அதனால், எனக்கும் சாதாரண மனிதரிடம் நாங்கள் பொய்யான ஆடம்பரத்தை காட்டுவது முறையல்ல என தோன்றியதால் அவரின் கருத்தை நானும் ஏற்றுக் கொண்டேன்.

பின்னர், வீட்டில் பாதுகாப்புக்காக இருந்த ஒரு உத்தியோகத்தருடன் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். ஆனால், அந்த பச்சைக்குத்தும் நிலையத்திற்கு செல்லும் போதே எனது மனது தவறான ஏதோ ஒன்று நடக்கப் போவதாக அறிகுறிக் காட்டியது. அங்கு செல்லும் போதே ஒரு சந்தேக மனநிலை, நிம்மதியற்ற மனநிலை எனக்கு இருந்தது.

அந்த நிலையத்திற்கு பொறுத்தமற்ற அலங்காரங்கள் இருந்ததை நான் அவதானித்தேன். பூ மாலைகள் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தன. பொறுத்தமற்ற புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒரு பச்சைக் குத்தும் நிலையத்தில் இதுபோன்ற காட்சியமைப்புக்கள் இருக்குமா என்று எனக்குத் தோன்றியது.

அங்கு சென்ற போது எனது கணவரின் மனநிலையும் சந்தோசமாக இல்லை என்று நினைக்கின்றேன். அதனை நான் அவதானித்தேன். நாங்கள் நிலையத்திற்குள் சென்ற பின்னர் தான் விளக்கேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உணவுகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன.

ஆனால், பின்னர் சிந்தித்துப் பார்க்கும்போதுதான் நேரத்தைக் கடத்துவதற்காக அவர்கள் தாமதித்தனர் என்பதை அறிய முடிந்தது. அந்த நிலையத்தின் உரிமையாளர் மற்றும் உடன் இருந்தவர்கள் சிரித்தும் கூட எங்களுடன் பேசவில்லை. முகத்தைப் பார்த்து பேசவில்லை. நான் பார்த்தவரை அவர்கள் நாங்கள் சென்றது முதல் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார்கள். சத்தமாக இல்லை, அமைதியான குரலில் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர்.

நாங்கள் இருவரும் அங்கு உணவருந்தும்போது, பாடகி சுஜீவா மற்றும் அவரது கணவர் ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில், முகத்தை மறைத்தவாறு வந்த சிலர் எனது கணவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

என் மீதும், சுஜீவா மற்றும் அவரது கணவர் மீதும் துப்பாக்கிக் குண்டுகள் பட்டன. நான் இறுகக் கண்ணை மூடிக் கொண்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நான் இறுதியில் கண்டது என்னைப் பார்த்தவாறே எனது கணவர் சரிந்து விழுந்ததைத் தான்.

எல்லோரும் நலமாக இருப்பார்கள், கண்ணை மூடிக்கொண்டிருப்பார்கள் என்று நான் நம்பினேன். எனது காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் பட்டதால் என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை. அதன் பிறகு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போதும் எனது கணவரை நான் கேட்டேன். அவர் நலமாக இருப்பதாகவும், அதிகமாக குண்டுகள் துளைத்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் இருப்பதாக கூறினர்.

கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள், நான் சிகிச்சையில் இருந்தேன். கேட்கும் போதெல்லாம் தந்தை நலமாக இருப்பதாக எனது பிள்ளைகள் கூறினர். ஆனால் அதிகமாக துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்காகியிருப்பதால் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே தற்போதும் இருப்பதாக கூறினார்கள். அதனை நம்பினேன். எனது பிள்ளைகள் பொய் கூறுவார்கள் என்பதை நான் நினைக்கவில்லை. உண்மையைக் கூறினால் எனக்கு ஏதேனும் நடந்துவிடக் கூடும் என்று அவர்கள் பயந்தார்கள்.

இதனையடுத்து ஒன்றரை மாதங்களின் பின்னர் மனநல மருத்துவர் ஒருவர் என்னை பரிசோதித்தார். ஒரு வாரமளவில் சிகிச்சை வழங்கினார். அந்த ஒரு வாரம் முடிந்த இறுதியில், மருத்துவர்கள் சகிதம் எனது பிள்ளைகள், எனது கணவர் அன்றே இறந்ததை என்னிடம் கூறினர். கதறி அழமட்டும் தான் என்னால் முடிந்தது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலைக்கு நான் கொண்டு செல்லப்பட்ட போது எனது அருகிலேயே எனது கணவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. எனது ஒரு கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால் என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை.

எனது கணவர் என் அருகில் இருந்ததைக் கூட நான் அறியவில்லை. ஒன்றரை மாதங்களின் பின்னரே இதையும் கூறினர்” என்று கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டுள்ளார்...