தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – சிவாஜி குற்றச்சாட்டு

ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், அதனை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே தமிழ் தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்தும் பேச்சு வார்த்தையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்போமானால் நமது இனம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

சமகாலநிலவரம் குறித்து வல்வெட்டித்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்திற்குள் தீர்வு தரப் போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் தமிழ் தரப்புகள் தற்போதும் மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும் என கூறியுள்ளார்.

ஆகவே பொதுசன வாக்கெடுப்பை கோரி அதன் மூலம் தீர்வை அடைய முயற்சிக்க வேண்டும் என்றும் அதற்கு வெளிநாட்டு மத்தியஸ்தம் அவசியம் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை சிங்கள தரப்புக்கு பலதடவைகள் கூறப்பட்டுள்ள போதும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என அரசாங்கம் கோருவது தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடு என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.