"சிங்கள பெண்ணை காதலிக்கும் தமிழ் எம்.பி" தக்க பதிலடி கொடுத்த சாணக்கியன்

என்னை நோக்கி விமர்சிக்கும் முட்டாள்களுக்கு நான் ஒருபோதும் பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

சிங்களப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்யவுள்ள இரா.சாணக்கியன், நாடாளுமன்றத்தில் போலியாக புலிச் சாயம் போர்த்திக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, சாணக்கியன் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த விமார்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று(08.12.2023) நாடாளுமன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன், என்னை நோக்கி நேற்றைய தினம் ஆளும் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தகாத வார்த்தைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த கேள்விகளை என்னிடம் கேட்பதற்கு முன்னர் அதிபரிடம் சென்று அவ்வாறான கேள்விகளை கேளுங்கள். ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கூறிய சில விடயங்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

நான் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்த விடயம் அனைவரும் அறிந்ததே. இவர் ஒரு விஞ்ஞானி போல் இங்கு கருத்து தெரிவிக்கின்றார். நான் கல்வி கற்றது சிங்கள பாடசாலை என தவறான கருத்துக்களை கூறியிருந்தார்.

கண்டி திருத்துவ பாடசாலை மூவின மக்களும் கல்வி கற்கும் பாடசாலை. எனக்கு சிங்கள நண்பர்கள் இருக்கின்றனர் என கூறி இருந்தார்.

எனக்கு அனைத்து மொழிகளை பேசும் நண்பர்கள் இருக்கின்றனர். இதை குறையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறான நபர்களின் கதைகளுக்கு நான் பதில் கூறாமல் சென்றாலும், மக்கள் இதற்கான பதிலை எதிர்ப்பார்பதால் இங்கு இதனை முன்வைக்கின்றேன்.

இவ்வாறான நபர்கள் கூறும் விடயங்களை சில தமிழ் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன. இவ்வாறான போலி விமர்சனங்களே என் வளர்ச்சிக்கு பிரதான காரணம்.

ஊடக அமைச்சு குறித்து கலந்துரையாடும் போது முக்கியமான விடயத்தை இங்கு கூறவேண்டும். இன்றும் வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர்.

நேற்றும் ஐபிசி தமிழ் ஊடகத்தினுடைய மட்டக்களப்பு மாவட்டதிற்கான பிராந்திய செய்தி சேகரிப்பாளர்கள் சிலருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்தபோது செய்தி சேகரிக்க சென்ற இரு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றின் முன் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

வடக்கு - கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் செயற்பாட்டினை இந்த அரசாங்கம் முன்னெடுக்கிறது.

அண்மையில் கூட ''ஒன்லைன் ஸேப்டி பில்'' என்ற ஒரு சட்டமூலத்தை உருவாக்கி அச்சுறுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கிறது. இது தொடருமானால் அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகளும் எதிர்ப்புக்களை மக்களால் அதிகரிக்கப்படும்.

அரச ஊடகங்களில் கூட வடக்கு - கிழக்கில் தமிழ் மொழி செய்தி சேகரிப்பாளருக்கு ஒரு தொகையும், சிங்கள மொழியில் செய்தி சேகரிப்பாளர்களுக்கு ஒரு தொகையினும் வழங்கப்படுகிறது.

மேலும், தென்னிலங்கை ஊடகவியாளர்களுக்கு கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற சலுகைகள் எதுவும், வடக்கு - கிழக்கு ஊடகவியாளர்களுக்கு கிடைக்கவில்லை.” என்றார்.