ஜனாதிபதி ரணிலும் மஹிந்தவும் ரகசிய சந்திப்பு : சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ராஜபக்சர்களுக்கும் இடையில் கடந்த 10ஆம் திகதி காலை அவசர இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சாகல ரத்நாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பங்கேற்றுள்ளதுடன்,

பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் அதிக தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும் நேற்றைய தினம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான காலவரையறையை தீர்மானிப்பது தொடர்பான விவாதமே பிரதானமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுன கட்சியும் இணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது தொடர்பில் மிகவும் இரகசியமான கலந்துரையாடலை நடத்தியிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் முக்கிய கட்சிகளின் சார்பில் உயர்மட்ட தலைவர்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளமை குறித்து அதிகம் பேசப்படுகிறது.

இதுவொரு இரகசிய சந்திப்பு என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா இல்லையான என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அரசியல் மட்டத்தில் பரபரப்பு நிலைமையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 19ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி, அதனை நிறைவேற்றும் வரை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது