உக்ரேன் யுத்தத்தின் ரகசிய நிதியாளர்கள் : உச்சக்கட்ட ஆத்திரத்தில் ட்ரம்ப்



ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து எரிபொருள் வாங்குவதன் மூலம் உக்ரேன் மீதான போருக்கு இந்தியாவும் மற்றும் சீனாவும் முதன்மை நிதியாளர்களாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவதை ஐரோப்பிய நாடுகளும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுக்குழு கூட்டம் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் போருக்கு முதன்மை நிதியாளர்களாக சீனாவும், இந்தியாவும் உள்ளனர்.

அவர்கள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்து தொடர்ந்து வணிகம் மேற்கொள்வதால் ரஷ்யாவுக்கு மறைமுகமாக நிதியளித்து உதவுகின்றனர்.

இருப்பினும், மன்னிக்க முடியாத வகையில் நேட்டோ நாடுகள் கூட ரஷ்ய எரிசக்தி மற்றும் எரிசக்தி தயாரிப்புகளுடனான வணிகத்தை பெரும்பாலும் துண்டிக்கவில்லை.

ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி கொள்முதல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால் நாம் அதிக நேரத்தை வீணடிக்கிறோம் என்று பொருள்.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள ரஷ்யா தயாராக இல்லை என்றால் மிகவும் வலுவான வரிகளை விதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது.

ஐரோப்பிய நாட்டினர் அனைவரும் இப்போது இங்கே கூடியிருக்கிறீர்கள், இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை போரை விரைவாக நிறுத்தும் என நம்புகிறேன்.


திறந்தவெளி எல்லை என்பது தோல்வியுற்ற சோதனைகளாக உள்ளது, மேற்கு நாடுகளில் புலம்பெயர்வு செய்பவர்கள் நரகத்திற்குச் செல்லவுள்ளனர்.

பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான வேகம் ஹமாஸுக்கான வெகுமதி எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.