நாளை புலமைப்பரிசில் பரீட்சை - பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய வேண்டுகோள்


ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 3 இலட்சத்து 23 879 பரீட்சாத்திகள் பரீட்சையில் தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 2 இலட்சத்து 44 092 பரீட்சாத்திகள் சிங்கள மொழி மூலமும், 79 787 பரீட்சாத்திகள் தமிழ் மொழி மூலமும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 2849 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 
அனைத்து மாணவர்களுக்கும் மிக இலகுவாக செல்லக் கூடியவாறு இந்த பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

அத்தோடு விசேட தேவையுடைய மாணவர்களுக்காக குறித்த பாடசாலைகளில் 6 பிரத்தியேக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்காக மஹரகம ஆதார வைத்தியசாலையிலும் விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை 491 ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பரீட்சை நிலையங்களுக்கருகில் தேர்தல் பிரசாரக் கூட்ட ங்களை நடத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்குமாறும் பரீட்சை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
 
பரீட்சைக்குப் பேனா பயன்படுத்தினால் கருப்பு அல்லது நீல நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் வேறு நிறங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் சிறுவர்கள் பென்சிலை பயன்படுத்தினால் அதற்குத் தடையில்லை எனவும், பென்சிலால் எழுதும் பிள்ளைகள் சில பென்சில்களை எடுத்து வருமாறும் குறிப்பிட்டுள்ளார்.
 
பரீட்சை நிலையத்திற்குள் அழிப்பான் மற்றும் தண்ணீர் போத்தல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றது.
 
மேலும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் கோப்பு அட்டைகளைப் பரீட்சை நிலையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.