சரத் பொன்சேகா- ரணில் ஒரே மேடையில்...! : பொன்சேகாவை புகழந்த ஜனாதிபதி

முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய "இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்ற நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள நெலும் பொகுண திரையரங்கில் நேற்றையதினம் (28) நடைபெற்றது.

நூலின் முதற் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் நினைவுப் பரிசும் இதன்போது வழங்கப்பட்டது.
இங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

உலகத்தில் மிக மோசமான யுத்தமொன்றுக்கே நாம் முகம்கொடுத்தோம்.
 
மற்றைய நாடுகளில் இன்றும் அவ்வாறான யுத்தங்கள் காணப்படுகின்றன.
 
ஆப்கானிஸ்தான் யுத்தம் இலங்கைக்கு முன்னதாக ஆரம்பமானது. அந்த வகையில் சரத் பொன்சேகா தனது பொறுப்பை சரிவர செய்திருக்கிறார்.

அதேபோல் சிவில் வாழ்க்கையிலும் அவர் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்.  அதன்போது அவர் தனிமைப்பட்ட வேளைகளிலும், சிறையிடப்பட்ட வேளையிலும் வலுவான மனிதராக உருவாகினார்.  

அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு கலந்துரையாடி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்து வழங்கப்பட்டது.  அதற்கு தகுதியானவர் என்ற வகையில் அவரும் ஏற்றுக்கொண்டார்.

தற்போது நாட்டுக்குள் யுத்தம் முடிந்துவிட்டது சமாதானத்துக்கான பணிகளை செய்வோம் என்று சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு முறை கூறினார்.  

அதற்கு தேவையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றிச் செல்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன். எமது இராணுவம் அனுபவங்கள் நிறைந்து. நாட்டைக் கட்டியெழுப்பி சமாதானத்தை ஏற்படுத்த இவர்களால் முடியும்." என்றும் தெரிவித்தார்.


இதனையடுத்து இங்கு கருத்து தெரிவித்த   பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

யுத்தத்தை நிறைவு செய்ய அரசியல் தீர்வை எட்ட வேண்டுமென பலரும் கூறினர். நான் இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற வேளையிலும் பாதுகாப்பு படை வீரர்கள் கவலையுடனேயே இருந்தனர்.  இருப்பினும் நாம் முப்பது வருட யுத்தத்தை வெற்றிகொண்டோம். இராணுவ வீரர்களின் இரத்தம், வியர்வை சிந்தப்படமால் அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்யப்படாதிருந்தால் யுத்தத்தை வெற்றிகொண்டிருக்க முடியாது.  யுத்தத்தின் பின்னர் இந்நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் இராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியிருந்தனரா என்பது கேள்விக்குரியாகும்." என்று தெரிவித்தார்.