உயிரிழப்பதற்கு முன்னர் நள்ளிரவில் சனத் நிசாந்த பதிவிட்ட தகவல் வெளியானது - பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிக்கை

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.

சனத் நிஷாந்தவை ஏற்றிச் சென்ற ளுருஏ வாகனம் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியுள்ளது.

இந்த மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த அறிக்கையில், இன்று அதிகாலை கந்தான பொலிஸ் பிரிவின் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று முன்னால் பயணித்த கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சாரதி படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.

சாரதி மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார். கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இராஜாங்க அமைச்சர் உட்பட உயிரிழந்தவரின் சடலம் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்ததுடன் அவரை பார்வையிட பொது மக்கள், அரசியல்வாதிகள், உறவினர்கள் என பலரும் குவிந்தமையால் அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்நிலை சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொண்டதுடன் அதற்கு ஆதரவாக சனத் நிசாந்த வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சனத் நிஷாந்த, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

கடந்த கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எழுச்சி போராட்டத்தின் போது  காலிமுகத்திடல் பகுதியில் வனமுறை சம்பவம் ஒன்று பதிவானது.

இதன் பின்னணியில் சனத் நிசாந்த செயற்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

 இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு ஏற்பட்ட விபத்துக்கு சற்றுமுன்னர் தனது முகநூலில் காணொளி பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் "வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் மனிதர்களைக் கணிப்பிட வேண்டாம். இன்று சமூகத்தில் பெரும்பாலானோர் இதனையே செய்கின்றனர்." - என அந்த காணொளி பதிவு அமைந்துள்ளது.

இன்று அதிகாலை 1.37 மணிக்கு தனது பேஸ்புக் கணக்கில் குறித்த பதிவை இட்டுள்ளார்.

இதேநேரம் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

அதற்கமைய, ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ஜகத் பிரியங்கர அந்த பதவியில் நியமிக்கப்படவுள்ளார்.

பிரியங்கர, விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் மாவட்டத் தலைவராக செயற்படுகின்றார்.

இதேநேரம் சனத் நிஷாந்த உயிரிழப்பதற்கு முன்னர் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடக செயற்பட்டாளர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமணமான மனமகன் இது தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

“மாமா சனத் நிஷாந்தவுக்கு என்ன நடந்தது என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. எனக்காக என்னை பார்க்க வந்த பயணித்தில் இந்த சம்பவம் நடந்தது என்பதனை நான் எப்படி தாங்கிக் கொள்வேன். ஆத்மா சாந்தி அடையட்டும் மாமா” என அவர் பதிவிட்டுள்ளார்.