காலஞ்சென்ற சம்பந்தனுக்கு நாமலின் இரங்கல் செய்தி

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் காலமாகியுள்ள நிலையில், அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன்.

அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றது. இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரா.சம்பந்தனின் மரணத்திற்கு முன்னாள் அதிபர் மகிந்த, சரத்பொன்சேகா எதிர்க்கட்சி தலைவர் என முக்கிய அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.