மத சுதந்திரத்தில் தலையிடும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்கிறார் சஜித்


நாட்டில் மத சுதந்திரம் இருக்க வேண்டும். நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் தாங்கள் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். மத சுதந்திரத்தில் தலையிடும் வகையிலான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்படும் 'சசுனட அருண' வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம கொஹொமபகஹபெலெஸ்ஸ ஸ்ரீ சுபோதாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் சங்கவாச கட்டிட நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யத் தேவையான, 750 000 ரூபா பெறுமதியான சீமெந்து மற்றும் அஸ்பெஸ்டஸ் உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர்  

 புத்தசாசனம், பௌத்த மதம், மகா சங்கரத்தினர் மற்றும் புத்தரை அவமதிக்கும் குழுவொன்று நாட்டில் உருவாகியுள்ளது.

அவர்களைப் பொறுத்தவரை விகாரைகளுக்கு உதவிகள் செய்வதும், சிலைகளை வழிபடுவதும் ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி வருகின்றனர்.
 
இது தவறா என்று மக்களிடம் கேள்வி எழுப்புகிறேன். அவர்களின் கருத்துப்படி, இன்றும் நான் ஒரு பெரிய தவறையே செய்து வருகிறேன்.
 
நாட்டில் மத சுதந்திரம் இருக்க வேண்டும். நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் தாங்கள் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும்.

இந்த பொய்ப் பிரச்சாரங்களை பரப்பும் நபர்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறி நாட்டில் மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்க எந்த உரிமையும் இல்லை என அவர் தெரிவித்தார்.