2025 ஜனவரி முதல், அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போதைய குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவான 17,800 ரூபா 25,000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 57,500 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
தற்போதைய வரிக் கொள்கைகள் அரச ஊழியர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கத்தை கணிசமான அளவில் பாதித்துள்ளன.
தற்போது சம்பளத்தில் செலுத்தும் வரிகள் 6 வீதம் முதல் 36வீதம் வரை உள்ளன. தமது ஆட்சியில் இந்த வரிகள் ஒரு வீதம் முதல் 24வீதம் வரை குறைக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
இதேநேரம் தற்போது அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது. அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு. ஜனவரி முதல் அதனை வழங்க நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு. ஜனவரி முதல் அதனை வழங்க நடவடிக்கை எடுப்போம். இது தேர்தலை இலக்கு வைத்துத் தெரிவிக்கப்படும் வாக்குறுதி என யாரும் நினைக்க வேண்டாம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சொல்வதையும் செய்யும் தலைவர் என்பது அரச ஊழியர்களுக்கு தெரியும். ஏனெனில் அரச ஊழியர்களுக்கு ஏற்கனவே 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது ரணில் விக்ரமசிங்க என்பது அவர்களுக்கு தெரியும் என்றார்.