தனது கைக்கூலிகளில் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக்கும் சதி நாடகமொன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (02) காலை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டை வங்குரோத்தடையச் செய்யும் சதித்திட்டத்திற்கு கடந்த அரசாங்கத்தின் அனைத்து பிரதானிகளும் பொறுப்புக்கூற வேண்டிய சூழ்நிலையில், அதனை மறந்து மத்திய வங்கி ஆளுநரை இலக்கு வைத்து பல கடுமையான அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் அரசாங்க தரப்பால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மத்திய வங்கியின் ஆளுநர் இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்று குற்றம் சாட்டி, தனது கைக்கூலிகளில் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக்கும் சதி நாடகமொன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
மத்திய வங்கி ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மேற்கொண்ட நடத்தை மிகவும் கேவலமானது.
அதேவேளை, சர்வகட்சி அரசாங்கம் குறித்து நகைப்புக் கதை பேசுவதை விட இத்தருணத்தில் அரசாங்கத்தின் பிரதானிகளுக்கு இடையில் அடிப்படை உடன்பாடு ஏற்பட வேண்டும்
இவ்வாறானதோர் உடன்பாடு இல்லாத சூழ்நிலை சர்வ கட்சி ஆட்சியைப் பற்றி சிந்திப்பது கூட சாத்தியமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த இக்கட்டான தருணத்தில் நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு தனது ஆதரவைக் கோரும் விடயத்திலும், அரசாங்க தரப்பிலும், நல்ல இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            