ரணிலுடன் இணையவுள்ள சஜித்தின் முக்கிய உறுப்பினர் : மௌனம் காக்கும் சஜித் தரப்பு


ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்களில் ஒருவருமான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்களின் வாக்குப் பலம் கொண்ட மேலும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலின் பிரசார மேடையில் ஏறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுத்கம பிரதேசத்தில் நடைபெற்ற இளைஞர் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எனினும்,முன்னாள் அமைச்சர் மனுஷவின் இந்த கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் இதுவரையில் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் புதிய அரசியல் அணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மல்வத்து மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நல்லாசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்த அவர்,

இரண்டு வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது சரியான பாதையில் முன்னேற்றம் கண்டு வருகின்றது.

இந்த வெற்றியை மேலும் பாதுகாப்பதற்கும் முன்னெடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம் என்றார்.
இதேவேளை சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

 இதேநேரம் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றிக்காக நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
களனி ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்த அவர்,

எம் மீதான மக்கள் நம்பிக்கை இன்றும் உறுதியாக உள்ளது எனவும் தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.