நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்களை இன்று அம்பலப்படுத்தப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
அதன்படி பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் முதல் பிரதேசசபை உறுப்பினர்கள் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பாரியளவிலான “கோப்புகளை” இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி இன்றைய தினம் குறித்த ஊடக சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் அங்கு பெருமளவான கோப்புகள் கொண்டு வரப்பட்டிருந்தன. 
இந்த நிலையில் ஒவ்வொரு கோப்பாக அவர் தெளிவுப்படுத்தும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்றை வெளிப்படுத்தியுள்ளார். 
அனுர இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் கலாச்சார அமைச்சரின் செலவு அறிக்கை முக்கியமானது. 146 செலவு அறிக்கைள்.
நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்த செலவுகளை செய்தாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த இவர்கள் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர்.
பணிப்பாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க இதில் கையெழுத்திடவில்லை. பிரதமரின் செயலாளர் ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார். அகில விராஜ் உட்பட மேலும் சிலர் கையெழுத்திடவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அறிக்கை எமக்கு நேற்று கிடைத்தது. அதனை சரியாக தொகுத்துக் கொள்ள முடியவில்லை. மத்திய கலாச்சார நிதியத்தின் சுமார் மூன்று பில்லியன் ரூபா நிதி முறைகேடு தொடர்பாக கோப்பே இது என சுட்டிக்காட்டியுள்ளார்.
பசிலின் சொத்துக்கள் பிரபல வர்த்தகர் பெயரில்: அம்பலப்படுத்தப்பட்டுள்ள தகவல்  
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
4100 மில்லியனுக்கான ஜின் நில்வால திட்டத்துடன் சீனா CAMC இன்ஜினியரிங் கோ லிமிடெட் ஒப்பந்தம் மிகவும் பிரபலமற்ற ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
சீனா சி.ஏ.எம்.சி இன்ஜினியரிங் கோ லிமிட்டெட் ஹொங்கொங்கில் வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருக்கும் நிலையில், அது தனித்தனி சந்தர்ப்பங்களில் 5 மில்லியன் டொலர்களை ரூட் இன்டர்நேஷனலுக்கு வழங்கியுள்ளது.
குறித்த நிறுவனம் நடேசனுக்கு சொந்தமானது. ரூட் இன்டர்நேஷனல் நிறுவனம், கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை வங்கிக்கு நிதியை மாற்றியுள்ளது.
அந்தக் கணக்கில் வைப்பு செய்யப்பட்ட பணத்தில் மல்வானையில் உள்ள பிரபல சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.  
புத்த பெருமானின் தங்கச் சிலையை காணவில்லை! அமைச்சு வாகனத்தில் இயந்திரம் இல்லை! -ஜேவிபி வெளிப்படுத்தும் மோசடிகள்
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின் பெயரில் 32 இடங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மன்றக் கல்லுாரியில் இன்று இடம்பெற்ற மோசடிகளை வெளிக்கொணரும் நிகழ்விலேயே அவர் இதனை வெளிப்படுத்தினார்.
எவன்கார்ட் நிறுவத்துடன் கடற்படையினர் செய்துக் கொண்ட உடன்படிக்கையின்படி 25வீத வருமானம் கடற்படைக்கு தரப்படவேண்டும்.
எனினும் முன்னர் கடற்படை தளபதிகள் சிலர், கடற்படைக்கு வரும்  வருமான வீதத்தை குறைத்தனர்.
அதாவது எவன்காட் நிறுவனத்துக்கு கிடைக்கவேண்டிய வருமானம் அதிகரிக்க செய்யப்பட்டது.
இதற்கு பதிலாக குறித்த முன்னாள் தளபதிகள் ஓய்வுப்பெற்றதும் அவர்களுக்கு எவன்கார்ட் நிறுவனத்தில் தொழில் வழங்கப்பட்டதாக அனுரகுமார தெரிவித்தார்.
மற்றும் ஒரு ஊழல் நடவடிக்கையின்போது அமைச்சர் ஒருவர் தமது காலம் முடிவடைந்து வாகனத்தை அமைச்சுக்கு திருப்பி கொடுத்தபோது, அதில் உள்ள இயந்திரத்துக்கு பதிலாக பழுதடைந்த இயந்திரம் பொருத்தப்பட்டு அது திருப்பிக் கொடுக்கப்பட்டதாக அனுர குமார குறிப்பிட்டார்.
அதேநேரம் நாமல் ராஜபக்ச தொடர்பான மோசடி ஆவணம் தம்மிடம் இருப்பதாக கூறிய அனுரகுமார,“சந்தஹிரு செய” என்ற படையினரின் நினைவகம் ஒன்றை அமைப்பதற்காக சுங்கத்திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட பெருந்தொகை தங்கத்தின் மூலம் செய்யப்பட்ட ஒரு அடி உயரமுள்ள புத்தபெருமானின் சிலைக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படையினர் வடபகுதி கடலில் 45 கிலோ கிராம் தங்கத்தை கைப்பற்றினர்
அதனை கைபற்றி 24 மணி நேரம் செல்லும் முன்னர் கடற்படை தளபதி, சந்தஹிரு சேயவை புதையலாக வைக்க கைப்பற்றிய தங்கத்தில் 8 கிலோ கிராம் தங்கத்தை தருமாறு சுங்க திணைக்களத்திடம் கோருகிறார்.
எனினும் கைப்பற்றிய தங்கத்தின் உரிமை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நாங்கள் ஒரு மாத கால அவகாசம் வழங்குவோம்,
இதனால் நேற்று கைப்பற்றிய தங்கத்தை இன்று வழங்க முடியாது என சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர், கடற்படை தளபதிக்கு பதில் அனுப்புகிறார்.
இந்த கோரிக்கை காரணமாக கைப்பற்றிய புதிய தங்கத்திற்கு பதிலாக ஏற்கனவே கைப்பற்றி அரசுடமையாக்கப்பட்ட தங்கத்தில் இருந்து 8 கிலோ கிராம் தங்கத்தை சுங்க திணைக்களம் வழங்கியுள்ளது.
இதனை தவிர இலங்கை வங்கியிடம் இருந்து சுமார் மூன்று கிலோ கிராம் தங்கத்தை பெற்றுக்கொள்கின்றனர்.
மொத்தமாக சுமார் 11 கிலோ கிராம் தங்கத்தை பெற்றுக்கொள்கின்றனர். இந்த தங்கத்தை வெலிசரயில் உள்ள கடற்படை முகாமுக்கு அனுப்பி வைத்து சந்தஹிரு சேயவில் புதையலாக புதைக்க ஒரு அடி உயரமான புத்தர் சிலையை ஒன்றை நிர்மாணிக்கின்றனர்.
அத்துடன் தங்க சிலையை செய்ய பயன்படுத்திய அச்சை பயன்படுத்தி வெங்கலத்திலும் இரண்டு புத்தர் சிலைகளை செய்யப்படுகின்றன.
கண்டி பிலிமத்தலாவை நாராம்பொத்த என்ற பிரதேசத்தில் ஒன்றரை அடி மற்றும் இரண்டரை அடி உயரமான இரண்டு புத்தர் சிலைகளை வெங்கலத்தில் செய்கின்றனர்.
அந்த சிலைகளுக்கு தங்கமூலம் பூசுகின்றனர்.
இந்த புத்தர் சிலைகளை அனுராபுரத்தில் கண்காட்சியிலும் வைக்கின்றனர். இறுதியில் புதையலில் வைக்க செய்யப்பட்ட ஒன்றரை அடி உயர தங்க புத்தர் சிலை காணாமல் போய் விடுகிறது.
புதையலாக புகைப்பட்டது தங்க சிலையா அல்லது தங்கமூலாம் பூசப்பட்ட சிலையா என்பது இன்னும் கண்டறியப்பட முடியாமல் இருக்கின்றது. அதனை கண்டுபிடிக்க முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அனுரகுமார குறிப்பிட்டார். 
பிணை முறி மோசடியில் பணத்தை பகிர்ந்து கொண்ட அரசியல்வாதிகள்: மைத்திரி குடும்பத்திற்கும் தொடர்பு
கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த பிரபலமான மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்திடம் இருந்து அன்றைய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவர்களில் ஒருவர் எனவும் ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புகளை பகிரங்கப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு தகவல் வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை நடத்த நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் 106 பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கையை வெளியிடாமல் இன்னும் மறைத்து வைத்துள்ளனர்.
அந்த அறிக்கையை வெளியிடுமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் நான்கு முறை எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த போதிலும் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
106 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் பிணை முறி மோசடியில் சம்பாதித்த 3 ஆயிரத்து 250 மில்லியன் ரூபாயை பகிர்ந்துக்கொண்டவர்களின் விபரங்கள் இருக்கின்றன.
அதில் ரோசி சேனாநாயக்க, தயாசிறி ஜயசேகர ஆகியோரின் பெயர்கள் பகிரங்கமாக பேசப்பட்டன. எனினும் பகிரங்கமாகாத பலரது விபரங்கள் அறிக்கையில் உள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அதில் உள்ளன.
அவர்களில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் பெயரும் உள்ளது. இதனை தவிர அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது மகள், மகன், மருமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பிணை முறி மோசடியில் சம்பாதித்த பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் அன்றைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அதில் தொடர்புள்ளது என தெரியவந்தது. அவருக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு வழக்ககள் விசாரிக்கப்பட்டு வருகின்றன எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            