வலுக்கும் உக்ரைன் ரஸ்யப்போர்..! ரஸ்யாவிற்காக களமிறங்கும் மற்றுமொரு நாடு: எல்லையில் முன்னெடுத்துள்ள இராணுவ பயிற்சி


உக்ரைன் ரஸ்யப்போர் இடம்பெறுகின்ற நிலையில், தற்போது ரஸ்யாவிற்கு ஆதரவாக போலந்து எல்லையில் பெலாரஸ் நாட்டு ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுவரும் தகவல் இன்னொரு உலகப் போருக்கான அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

வெளியான தகவலின் அடிப்படையில், போலந்து எல்லைக்கு மிக அருகாமையில் பெலாரஸ் துருப்புகள் நெருங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெலாரஸ் நாட்டை பொறுத்தமட்டில், தீவிர ரஸ்ய ஆதரவு நாடு மட்டுமின்றி, விளாடிமிர் புடினை நாட்டின் இன்னொரு தலைவராக கொண்டாடும் அதிபரை பெற்ற நாடு.

தற்போது பெலாரஸ் ராணுவத்தினர் தீவிர பயிற்சிகளில் களமிறக்கப்பட்டுள்ளமை ரஸ்ய துருப்புகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இன்று நேமன் பகுதி, நாளை விஸ்டுலா அல்லது டினீப்பர் என குறிப்பிட்டுள்ள பெலாரஸ் ராணுவ ஊடகம் ஒன்று, பெலாரஸ் ராணுவ டாங்கிகளுக்கு எவராலும் தடைபோட முடியாது எனவும் சூளுரைத்துள்ளது.

நேமன் ஆற்றின் அருகே பயிற்சியில் ஈடுபட்டுள்ள பெலாரஸ் டாங்கிகள், போலந்து எல்லையை குறிவைக்கிறதா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

நேமன் ஆறானது போலந்து எல்லையில் இருந்து 7.5 மைல்கள் தொலைவில் தான் அமைந்துள்ளது. உக்ரைனுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பெலாரஸ் ஈடுபடும் என்றால், உக்ரைன் போர் போலந்தின் மீதும் வியாபிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

இதனிடையே தென் மேற்கு போலந்து கிராமம் ஒன்றில் இருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நேட்டோ அமைப்பு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. நடந்தது ஒரு விபத்து என போலந்து சமாளித்தாலும், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருவதால் இந்த விவகாரம் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்னும் சில வாரத்தில் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை உக்ரைன் மீது முன்னெடுக்க விளாடிமிர் புடின் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் வெளிவிவகாரத்துறை இந்த விவகாரம் தொடர்பில் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்நிலையில், ஜனவரி அல்லது பெப்ரவரியில் ராணுவத்தினருக்கு விளாடிமிர் புடின் உத்தரவிடலாம் என்றே கூறப்படுகிறது.