கூகுளுக்கு ரஷ்யா அபராதம் விதிப்பு!

மாஸ்கோ நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளது.

ரஷ்யாவில் சட்டவிரோத தகவல்களை கூகுள் நீக்க தொடர்ந்து தாமதம் செய்துவந்ததாலேயே இந்த அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி $98 மில்லியன் அபராதமாக விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கும் முன் நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு துவக்கம் முதல் பலமுறை ரஷ்யா வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. எனினும், நிறுவனம் ஒன்றின் வருடாந்திர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை அபராதமாக விதித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு எத்தனை சதவீதம் அபராதம் விதித்துள்ளது என்பதை அறிவிக்கவில்லை. எனினும், அபராத தொகையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் படி கூகுள் நிறுவனத்திற்கு 8 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

போதை பொருள் துஷ்பிரயோகத்தை விளம்பரப்படுத்தும் தகவல்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவுகளை நீக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.