ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேற்றம்! - தினேஷ் கார்த்திக் ஓய்வு!


இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது வெளியேற்றல் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் 173 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதற்கமைய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ள நிலையில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்த நிலையில்  ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குறித்த சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான வெளியேற்றல் (Eliminator) போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

இதுவரையில் 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 55 அரைச் சதங்கள் உட்பட 4,842 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அத்துடன் இவர் விக்கெட் காப்பாளராக செயற்பட்ட காலத்தில் 145 பிடியெடுப்புகளை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது