எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு: ரொசான் ரணசிங்க

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (27.11.2023) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனது உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இன்றோ, நாளையோ நடுவீதியில் நான் படுகொலை செய்யப்படலாம்.

இந்த உயிர் அச்சுறுத்தலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தாம் அமைச்சுப் பதவி வகிப்பதற்கு தகுதியானவர் எனவும், மக்களின் வாக்குகளினால் தெரிவானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் அரசியலில் எவ்வித ஊழல் மோசடிகளிலும் தாம் ஈடுபட்டதில்லை எனவும், சொந்த வியாபார முயற்சிகள் மூலம் கடின உழைப்பில் முன்னேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சாகல ரத்நாயக்க எவ்வித தகுதியும் இன்றி அமைச்சு விவகாரங்களில் தலையீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி தம்மை பழி வாங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தாமும் ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பழையவற்றை மறந்து தற்பொழுது தம்மை பழிவாங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்படுவதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம் பெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கிரிக்கெட்டில் நிலவிவரும் மோசடிகளை தடுக்க முடியாவிட்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலேனும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.