செங்கலடியில் முக கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை


செங்கலடி ரமேஸ்புரம் பிரதேசத்தில் முகக் கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் சென்ற பெண்கள் இருவரை அழைத்து வீட்டு விலாசம் கேட்டுள்ளனர். பேசிக் கொண்டே இருக்கும் போது ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க மாலையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த 19.12.2022 அன்று காலை சரியாக 10.55 மணியளவில் செங்கலடி ரமேஸ்புரம் முருகன் கோயில் வீதியில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு செங்கலடி பிரதேசத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு திருடர்கள் குறித்த ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

மோட்டார் சைக்கிளில் முகக் கவசம் அணிந்து வந்த இரண்டு இளைஞர்கள் செங்கலடி ரமேஸ்புரம் முருகன் கோயில் வீதியில் உள்ள கடை ஒன்றின் முன்னால் நின்று கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களை வேவு பார்த்து அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களிடம் வீட்டு விலாசம் ஒன்றை கூறி அதனை விசாரிப்பது போல் விசாரித்து அந்த நேரத்தில் கழுத்தில் உள்ள தங்க மாலையை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு குறித்த திருடர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரியும் காட்சிகள் அந்த பிரதேசத்தில் உள்ள பல சீ.சீ.டிவி காணொளிகளில் பதிவாகி உள்ளது. இது குறித்த விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் இருந்த சீ.சீ.டீவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவருகின்றனர். கீழே உள்ள படத்தில் உள்ள வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் தெரிந்தவர்கள், அவர்கள் பற்றிய தகவல்களை ஏறாவூர் காவல்துறையினரிடம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் வீதிகளில் தனியாக செல்லும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் வீதிகளில் நடமாடித் திரியும் இளைஞர்கள், பெண்கள்,பொதுமக்கள் திருடர்கள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.