சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பான மீளாய்வு: புதிய அரசாங்கத்தின் அதிரடி நகர்வு

இலங்கையில் குற்றங்கள், மோசடிகள் மற்றும் பிற சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பான பல உயர்மட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான விசேட கூட்டம் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளர் ரவி செனவிரத்ன (Ravi Seneviratne) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நடைபெற்றுவரும் மற்றும் தடைப்பட்ட விசாரணைகளை ஆராய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில்  பதில் காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய, சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் தேவையில்லாமல் தாமதப்படுத்தப்பட்ட விசாரணைகள் உட்பட பலதரப்பட்ட விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அரசியல் செல்வாக்கு காரணமாக ஏதேனும் விசாரணைகள் தடைபட்டுள்ளதா என்று கேட்டறிந்த செயலாளர், ஏதேனும் தாமதங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய விசாரணைகள்

எந்தெந்த விசாரணைகளை மறுதொடக்கம் செய்ய வேண்டும் என்பதையும், வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படக்கூடிய வழக்குகளை அடையாளம் காண வேண்டும் என்பதையும் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது பல முக்கிய விசாரணைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன் படி, விசாரணைகளை திறம்பட தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய அறிக்கை தயாரிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.