மின்சார சபையின் மறுசீரமைப்பு - கஞ்சன விஜேசேகர!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை 6 மாதங்களுக்கு பதிலாக 3 மாதங்களுக்கு ஒருமுறை திருத்தும் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆண்டுக்கு இரண்டு முறைதான் மின் கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியும் என்ற தவறான கருத்து உள்ளது.முதல் அமைச்சரவைப் பத்திரம் கொண்டு செல்லப்படும்போதும், கொள்கை தயாரிக்கப்படும்போதும் அவசர சூழ்நிலைகளின் போதும் கோரிக்கை விடுக்க மின்சார சபைக்கு அதிகாரம் உள்ளது.

அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மேலும், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான தற்போதைய நிலை, சட்டமா அதிபரின் வரைவு அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் வரைவு அலுவலகம் அதனை தயாரித்து கடந்த செவ்வாய்கிழமை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த வாரத்தில் தேவையான விளக்கங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை சட்டமா அதிபர் என்னிடம் தெரிவித்தார். மறுசீரமைப்பு திட்டத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை 6 மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் மின்கட்டண திருத்தத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.