ஜுலைக்குள் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு : ஜனாதிபதி ரணில் வாக்குறுதி


தமிழ்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நிலைப்பாட்டில் எத்தகைய மாற்றமும் இல்லை என்றும், எதிர்வரும் ஜுலை மாதத்துக்குள் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண்பதற்கு முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்புக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றபோதிலும், தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை வழங்காமல் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச்செய்துவருவது குறித்து ஜனாதிபதியிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பந்தன், இந்த நிலை தொடரும் பட்சத்தில் தாம் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டியேற்படும் என்றும் எச்சரித்தார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, தனக்கு எதிர்வரும் ஜுலை மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறும், அதற்குள் அதிகாரப்பகிர்வு, காணி விடுவிப்பு, அரசியல்கைதிகள் விவகாரம் என்பன உள்ளடங்கலாகத் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வொன்றை எட்ட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும் இதன்போது மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடத்தவேண்டுமென தமிழரசுக்கட்சி உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் தேர்தல் செயன்முறையில் காணப்படும் சட்டரீதியான சிக்கல்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை நிவர்த்தி செய்ததன் பின்னர் தேர்தலை நடத்தமுடியும் என்று குறிப்பிட்டதுடன் மாகாணசபைகளுக்கு கல்விசார் அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுவருவது பற்றியும் குறிப்பிட்டார்.