சஜித்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கைஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் ஓசல ஹேரத், தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு  இலங்கை குடியுரிமை என தெரிந்து கொண்டே அவரை தேசியப் பட்டியலின் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி பெயரிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இதன்படி 1981ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும், கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் மீறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

டயனா கமகேவிற்கு  இலங்கை குடியுரிமை கிடையாது என்பது குறித்து கடந்த 2020 ஆம் ஆண்டில் தாம், சஜித் தரப்பிற்கு தெளிவாக அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டயனா கமகே தவறிழைப்பதற்கு சஜித், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் சஜித், மத்தும பண்டார மற்றும் டயனா கமகே ஆகிய மூவரும் சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளதாக ஓசல ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சஜித் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.