பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாட்டில் பின்னடைவு – மனித உரிமைகள் அலுவலக பேச்சளார் சுட்டிக்காட்டு

பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக பெண்களால் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோரின் குடும்பங்கள் முகங்கொடுத்திருக்கும் பாதுகாப்பற்ற நிலை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்தாசனி இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இராணுவமயமாக்கல், இன-மதரீதியான தேசியவாதம், சிறுபான்மையினர் மத்தியில் அதிகரித்துள்ள பதற்றம் உள்ளிட்டவற்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலோங்கியிருக்கும் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதான பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் மீறல்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் 80 பேருக்கும் மேற்பட்டோர் கடந்த வருடம் ஜுன் மாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டமையை வரவேற்றுள்ள அவர், அதன் பிரயோகத்தை இடைநிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.