நாடு முழுவதும் நிகழ்ந்த மின்தடைக்குக் காரணம் இது தான்: பொறியியலாளர்கள் விளக்கம்



கொத்மலை, பொல்பிட்டிய, பாதுக்க மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளை இணைக்கும் மின்சாரம் கடத்தும் பாதையின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யத் தவறியதன் விளைவாக, நாடளாவிய மின்தடையினைத் தடுக்க முடியவில்லை என உயர்மட்ட பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று மின்னல் தாக்கம் காரணமாக கொத்மலையில் இருந்து பியகம வரையான மின்விநியோகப் பாதை துண்டிக்கப்பட்டதை அடுத்து மின்தடை ஏற்பட்டது.

அந்த நேரத்தில், இணைப்பினூடாக சுமார் 500 மெகாவாட்டைக் கடத்தப்பட்ட போது, நாட்டின் மொத்தத் தேவை 1500 மெகாவாட்டாக இருந்தது.

இதனால் மின் இணைப்பின் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இழப்புக்கு வழிவகுத்தது, மற்றைய மின்பிறப்பாக்கிகளால் தாங்கக்கூடிய வரம்புகளுக்குக் குறைவான அதிர்வெண்ணினைக் கொண்டிருந்ததால் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்து தீவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. 

மேலும், மத்திய மலையகத்தில் உள்ள நீர்மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான மற்றுமொரு மின்பாதையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக அதனை முடிக்க முடியவில்லை எனவும் மின்சார சபையின் உயர்மட்ட பொறியாளர் ஒருவர் இதன் போது தெரிவித்திருந்தார்.

இது கொத்மலையில் இருந்து பொல்பிட்டிய மற்றும் பண்டுக்க ஊடாக அதுருகிரிய வரையான ஒரு பரிமாற்ற பாதையாகும், இதில் பொல்பிட்டிய-பாதுக்க பாதை பூர்த்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கொத்மலை - பொல்பிட்டிய பகுதியின் பணிகளை விரைவில் முடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் நிறைவேறினால், நாட்டின் அனைத்துப் பகுதியிலும் மின்தடையைத் தவிர்த்திருக்கலாம்' என்றார். 

இந்தத் திட்டமானது ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டு 2015 இல் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.