அரசில் அங்கம் வகித்தாலும் கட்சியின் சுயாதீனத்தன்மையைக் காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. அரசிலிருந்து வெளியேறுவதற்குகூட தயாராகவே இருக்கின்றோம் – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு முடிவையும் எதிர்கொள்வதற்கு தயார் எனவும் மஹிந்த நேற்று கூறினார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
கேள்வி – ஜனாதிபதி தேர்தலையா அல்லது பொதுத்தேர்தலையா நீங்கள் கோருகின்றீர்கள்?
பதில் – எதற்கும் நாம் தயார். பொதுத்தேர்தலை வழங்கினால் அதற்கு தயார், ஜனாதிபதி தேர்தல் வைக்கப்படுமானால் அதற்கும் தயார். எனவே, இதில் எமக்கு பிரச்சினை கிடையாது. இரண்டுக்கும் தயாராகவே இருக்கின்றோம்.
கேள்வி – தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்துள்ளீர்களே?
பதில் – ஆம், நான் மட்டுமல்ல எமது கட்சியில் உள்ள 95 வீதமானோர் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.
கேள்வி – அப்படியானால் இது விடயம் தொடர்பில் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கையை அனுமதிக்கவில்லையா?
பதில் – அனுமதிக்கவில்லை.
கேள்வி – நீங்களும் அரசில்தானே இருக்கின்றீர்கள்?
பதில் – எமக்கு சுயாதீன உரிமை உள்ளது. அரசில் அங்கம் வகித்தாலும் அந்த சுயாதீன உரிமையை காட்டிக்கொடுக்கவில்லை.
கேள்வி – நீங்கள் விரும்பாத விடயங்கள் இடம்பெற்றால் அரசில் இருந்து விலகவும் தயாரா?
பதில் – நாட்டுக்காக எதற்கும் நாம் தயார்
இதேநேரம் முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ( சுறுP, சுளுP, ஏளுஏ, ருளுP) அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.
இதேநேரம் தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவித்தவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்குச் சீட்டுகளை விரைவாக அச்சிடுவதற்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் அச்சடிக்கும் வசதிகள் அச்சகத்தில் இருப்பதாக அதன் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்தார்.
இதேநேரம் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் குழுவுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சமூகத்தில் நிலவும் கேள்வியை அப்படியே இருக்க விடுவதாகத் ஜனாதிபதி பதிலளித்தார்.