தேர்தல் ஆணையாளர் கோரும் தொகையை வழங்க திறைசேரி தயார் என்கிறார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

 
தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கான பணத்தை வழங்க திறைசேரி தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர்  

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பணப் புழக்கங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படாத வகையில் பணத்தை வெளியிடுவதற்கு பொருளாதாரம் உரிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தேர்தல் ஆணையாளர் அலுவலகம் சுமார் 8 பில்லியன் ரூபா மதிப்பீட்டை அனுப்பியுள்ளது. அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள் வாக்குப் பெட்டிகள் போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் பணத்தை வழங்க திறைசேரி தயாராக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மதிப்பிடப்பட்ட செலவு அதிகரித்தால், அவ்வாறான நடவடிக்கைகளுக்கான மேலதிக செலவுகளை சமாளிப்பதற்கு தற்போது பணம் இருப்பதால் பிரச்சினை இல்லை என்றார்.