ஜனநாயகத்தை நிலை நிறுத்த ரணில் தரப்பு விரும்பவில்லை : சிறீதரன் குற்றச்சாட்டு

இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் தொழிற்சங்கப் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடு வங்குரோத்து நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பொழுது இலங்கையில் நடைபெறுகின்ற பல போராட்டங்கள் உண்மையானவை. வறுமை நிலையிலேயே மக்கள் வாழுகின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு நேரம் அல்லது ஒரு நேரம் உணவு அருந்திவிட்டு பின்னர் தங்களது தூக்கத்துக்கு செல்கின்ற மக்கள் இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

இந்த நாடு பொருளாதார ரீதியாக கடுமையாக நலிவுற்றிருக்கிறது.

பொருட்களின், மின்சாரத்தின், எரிபொருளின் விலைகளை அதிகரித்ததால், மக்கள் வாழ்வாதார நிலைகளை இழந்திருக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளால், நாடு வாங்குவது நிலையை நோக்கி நகர்கிறது.

தேர்தல் என்பது ஜனநாயக முறையிலே செயல்படுத்தப்படுகின்ற ஒரு நடவடிக்கை. அந்த ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதற்கு தற்போது இருக்கின்ற அரசாங்கம் விரும்பவில்லை.

தேர்தல் மீதோ அல்லது மக்களை சரியான பாதையில் அழைத்துச் செல்வதற்கான பயணங்கள் மீது இந்த அரசாங்கத்திற்கு நம்பிக்கை இருப்பதாக எங்களுக்கு தென்பட வில்லை” - என்றார்.