ரணிலால் நாட்டுக்கு பேராபத்து -அபாய சங்கு ஊதுகிறார் தேரர்



13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்கக்கூடாதென தெரிவிக்கும் பேராசிரியர் அகலகட சிரி சுமண தேரர், காவல்துறை, இராணுவத்துக்குப் பயப்படாது ரணிலின் இனவாத எண்ணக்கருவை தோற்கடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இது ​தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்குக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க எடுக்கும் முயற்சிகளை நாட்டு குடிமக்கள் என்ற ரீதியிலும், மாநாயக்க தேரர்கள் என்ற ரீதியிலும் நாம் தோற்கடிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திலேயே அதிகளவில் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அந்த மக்களின் வாழ்க்கையும், பொருளாதார நிலைமை​யும் முற்றாக சரிந்துள்ளது.

இப்பிரச்சினைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்க்காது, 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப் பார்க்கிறார். எனவே, 13ஆவது திருத்தச் சட்டம் அம்மக்களுக்கு தீர்வாக அமையாது.

எனவே, ரணிலின் இதுபோன்ற வன்முறையான செயற்பாடுகளால் நாட்டுக்குப் பெரும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.

இராணுவத்துக்கும் காவல்துறைக்கும் பயப்படாது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை மீள திரும்பப் பெறும் வரையில் இந்நாட்டின் தேசிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து, ரணிலின் இனவாத எண்ணக்கருவை தோற்கடிக்கும் வரையில் போராட வேண்டும் எனவும் தெரிவித்தார்.