ரணில் விக்கிரமசிங்க 140 வாக்குகளைப் பெறுவார் – ஐக்கிய தேசியக் கட்சி


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றில் இடம்பெறும் வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 140 வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்தார்.

பொருளாதார மந்தநிலையில் உள்ள நாட்டிற்கு தேவையான கொள்கைகள் குறித்து ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கொண்டுள்ள அரசியல் அனுபவத்திற்காக அவருக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடைக்கும் என நம்புவதாக வஜிர அபேவர்தன கூறினார்.

அவ்வாறு பெரும்பான்மை அங்கீகாரத்துடன் அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும் என அவர் தெரிவித்தார்.

50 வருட கால அரசியல் அனுபவம் கொண்ட ரணில் விக்ரமசிங்கவினாலேயே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.