ரணிலுக்கு ஒரு கோடி: வஜிர அபேவர்தன வெளியிட்ட ஆரூடம்

அடுத்த அதிபர்த் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டை மீட்கக்கூடிய தேசிய தலைவர் உருவாகியுள்ளார் என்றும் 55 வருடகால அரசியல் அனுபவம் இருந்ததால்தான் நாடு விழுந்தபோது அதனை மீட்க முன்னிலையாகி வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைவராலும் வீராப்பு பேச முடியும், ஆனால் செய்துகாட்டும் பழக்கமே ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ளது, அவர் உலகை வென்ற தலைவர் என்று அவர் கூறியுள்ளார்.

நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டால் எமது தேசியத் தலைவர் அடுத்த அதிபர் தேர்தலில் 100 லட்சம் வாக்குகளைப் பெறுவார்.

இன்று பொய்யுரைப்பது தடை செய்யப்பட்டுள்ளது, நாட்டை மீட்கும் திட்டம் இருந்தால் அதனை பாதீட்டு காரியாலயத்தில் ஒப்படைக்கலாம்.

1952 இல் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக 12 வீதம் ஒதுக்கப்படும் என இந்திய பிரதமர் நேரு அறிவித்தபோது விமர்சனங்கள் எழுந்தன, இன்று இந்தியா எந்த மட்டத்தில் உள்ளது, நிலவுக்குகூட விண்கலம் அனுப்பும் அளவுக்கு முன்னேறியுள்ளது, நேருவிடம் தூரநோக்கு சிந்தனை இருந்தது.

அதேபோல எமது தேசியத் தலைவரிடம் தூரநோக்கு சிந்தனை இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க என்ற தேசிய தலைவர் இருப்பதால் எமக்கு எதிர்காலம் குறித்த அச்சம் இல்லை என்று அவர் கூறினார்.