தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை : பசிலிடம் கூறிய ரணில்


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவை சந்தித்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்தக் கலந்துரையாடலில் பொதுத் தேர்தலை நடத்துவது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் கடுமையாக வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று கலந்துரையாடல் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் அனுபவத்தின் பிரகாரம் தற்போது பொதுத் தேர்தல் ஒன்று நாட்டுக்கு சாதகமானதாக அமையும் எனவும் இல்லையேல் பாதகமான சூழ்நிலை உருவாகலாம் எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என தகவல்கள் குறிப்பிடுகின்றன.