ஒரு அதிகாரத்தை மாத்திரம் தரமாட்டேன் என்கிறார் ரணில்

பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்கத் தயார் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தற்போது நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான கடைசி  பகுதியில் இருக்கிறோம்.

குறிப்பாக, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இது குறித்து கலந்துரையாடி வருகின்றோம்.

மீதமுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். காணி பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். அனைத்து தரப்பினரையும் அழைத்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என நம்புகிறோம்.

 அத்துடன் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில்  தமிழ்  கட்சிப் பிரதிநிதிகளை  சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளேன்.

பாதுகாப்பு தரப்பினருடன் பேசி மேலும் காணிகளை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வின் 3வது அட்டவணையின் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதே இங்கு அடிப்படை கோரிக்கையாக உள்ளது.

பொலிஸ் அதிகாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை.  நிலச் சட்டத்தை முன்வைக்க வேண்டும். மேலும் 3வது பட்டியலில்  உள்ள மற்ற விடயங்களை  வழங்குவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

இது தொடர்பில், ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி,  மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு பாராளுமன்றில் உள்ள கட்சிகளுடன் இணக்கம் எட்டப்பட்டு  வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.