நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும், குழுக்களும் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இன்று பலமட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் மற்றும் சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன் கூட்டணி அமையுமாயின் அதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளன.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவருக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வந்த உறுப்பினர்களின் குழுவினால் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
வெற்றிக் கிண்ண சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு உரிய கூட்டணி தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும் எனவும், அதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணியின் கீழ் கதிரை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலில் இன்று இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.