மைத்திரியின் ஆதரவை நிராகரித்த ரணில் : ஜனாதிபதிக்கு ஆதரவாக 34 கட்சிகள் இன்று கைச்சாத்து


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், 'இயலும்  இலங்கை" உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இதில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கைச்சாத்திட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வானது கொழும்பு வோர்டஸ் எஜ் விடுதியில் இன்று இடம் பெற்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூது அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை ரணில் நிராகரித்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கையை நிராகரித்த ரணில், நம்ப முடியாத ஒருவரின் ஆதரவு தமக்கு வேண்டாமென தெரிவித்ததாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 ஒரு முன்னாள் ஜனாதிபதி, இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குச் சென்றதை நினைத்து நாங்கள் வருந்துகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
 
இதேநேரம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான கடிதங்கள் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதேநேரம் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று (16) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒற்றை நிரல் கொண்ட வாக்குச் சீட்டானது 27 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், வேட்பாளர்களின் பெயர்கள் இரட்டை நிரல்களுடைய வாக்குச்சீட்டு எனில் 13.5 அங்குல நீளம் மற்றும் அகலம் காணப்படும் என அரச அச்சக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.