ஜனாதிபதி தேர்தலில் விமான பயணங்களுக்கு பெந்தொகை பணத்தை செலவிட்ட ரணில், சஜித் : விபரம் வெளியானது


கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் விமான போக்குவரத்திற்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளதாக விமான படை தெரிவித்துள்ளது.

 இலங்கை விமானப்படையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு அமைவாக  இவ்விடயம் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளர்களுக்கு விமான போக்குவரத்து வழங்கியதன் மூலம் இலங்கை விமானப்படை 56 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பிரச்சார காலப்பகுதியான 34 நாட்களில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விமான படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 23 விமானப் பயணங்களுக்கு 29.09 மில்லியன் ரூபாவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 11 விமானப் பயணங்களுக்கு 20.75 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச இரண்டு விமானப் பயணங்களுக்கு 1.44 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக விமான படை தெரிவித்துள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டு விமானப் பயணங்களுக்கு 2.68 மில்லியன் ரூபாவும்,

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஒரு விமானப் பயணத்திற்கு 1.24 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளார்.

எனினும் தேர்தல் பிரச்சார காலப்பகுதியில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எந்தவொரு விமான பயணங்களையும் மேற்கொள்ளவில்லை என விமான படை தெரிவித்துள்ளது.