திடீரென மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய ரணில்- பசில்



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் கொழும்பில் நேற்றையதினம்(04) மாலை இடம்பெற்றது.

எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல்கள் உள்ளிட்ட  பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

தென்னிலங்கை அரசியலில் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான நிலைப்பாடு காணப்படாத நிலையில் பசில் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடையேயான இச் சந்திப்பு  முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் பேசவேண்டுமென என ஜனாதிபதி ரணில் அறிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் விடயம். எனவே இந்த விடயம் தொடர்பாக தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமான விடயமல்ல.

மாறாக இது தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் பேசவேண்டுமென்பதே தனது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.