இணக்கப்பாடின்றி முடிவடைந்த ரணில் - பசில் பேச்சுவார்த்தை..! : ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய முடிவு


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் நேற்றைய தினம் மாலை பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தையும் எவ்வித இறுதி இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஸ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென்பதே ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இணக்கப்பாட்டை வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் எதிர்கால தேர்தல்கள் தொடர்பில் விரைவில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய சின்னத்தில் பொதுக் கூட்டணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் இணைந்து தேசிய வேட்பாளராக போட்டியிடுவதே ஜனாதிபதியின் விருப்பமாகும்.

தேர்தலில் போட்டியிடும் கட்சி தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் சின்னம் கையடக்க தொலைபேசியாக காணப்படும் எனவும் கூறப்படுகின்றது.