எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பதை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர்,
முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறு எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க தன்னை முன்னிறுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சஜித் பிரேமதாச தனது கட்சி உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்க கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுத்தால் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம் என கடற்றொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அடுத்த தேர்தல் வரை ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என்றும் தேர்தலுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்படும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேநேரம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாகவும் அதற்கு முன்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை தழுவி ஒரு நாவலை அவர் எழுதவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் ஊழல் அற்ற நாட்டை உருவாக்குவது தொடர்பிலேயே அவரது தேர்தல் பிரச்சாரம் அமையும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.