ரம்புக்கனை சம்பவம்: விசாரணைக்குழு அறிக்கையில் வெளியான தகவல்

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட  விசேட காவல்துறை குழு இன்று காலை கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில் நான்கு டி-56 துப்பாக்கிகளை காவல்துறையினர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், இதன்போது, 35 தோட்டாக்களையும் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த 42 வயதான சமிந்த மதுஷானின் சடலம் இன்று அதிகாலை அவரின் இல்லத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரின் சடலம் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரின் சடலம் மீதான இறுதிக் கிரியைகள் நாளைய தினம் நாரேன்பெத்த - ஹிரிவடுவன்ன பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தைக் கலைப்பதற்காக, காவல்துறையினர் முயற்சித்தபோது, காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது.

இதன்போது மேற்கொள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் 42 வயதான சமிந்த லக்ஷான் என்பவர் பலியானார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 14 பேர், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம், 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், ஒருவர் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பில், நேரில் சென்று விசாரணை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் குழுவொன்று இன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.

கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில்,  காவல்துறைமா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன உட்பட சில சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் இன்று முற்பகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.