பதுங்கு குழிகளில் ராஜபக்சர்கள்!! அம்பலப்படுத்திய சஜித்

அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வீதிகளை மறித்து வைத்துள்ளது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் வீதிகளில் இல்லாது பதுங்கு குழிகளில் ஒளிந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, மக்களின் செயற்பாடுகளுக்கு இடையூறாக காணப்படும் நிரந்தர தடுப்புகளை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் மீதான அடக்குமுறைகளையும் அச்சுறுத்தலையும் மேற்கொண்டு வருவதாகவும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக கொழும்பு கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள வீதிகளை மறிக்கும் வகையில் நிரந்தர வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தாமரைத் தடாக வீதி முற்றாக மூடப்பட்டுள்ளமையினால் வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசிப்பதற்கு வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதுடன், வீதி தடைகள் மூலம் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார் .