ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் அனைவரும் கைகோர்க்கவுள்ளனர். செப்டெம்பர் 10ஆம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாட்சம்பளம் கிடைத்தவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான இராதாகிருஸனண் மற்றும் உதயகுமார் ஆகியோர் ஜனாதிபதி ரணிலுடன் இணைவர் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
பம்பலப்பிட்டியவிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய தலைவர் யார் என்பதை நாட்டு மக்கள் இனங்கண்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உழைத்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் அதை ஸ்திரப்படுத்தும் பணியை அவரால் மாத்திரமே செய்ய முடியும்.
எனவே தான் நாம் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் வெளியே வந்து அவரது வெற்றிக்கு முழு ஆதரவை வழங்குகிறோம்.
நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அநுரவும், சஜித்தும் குறிப்பிடுகின்றனர். அதனை எவ்வாறு செய்வார்கள் என்பதை தெளிவுபடுத்துமாறு அவர்களை விவாதத்துக்கு அழைக்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் விசித்திரக் கதைகளைக் கொண்டுள்ளது. அதில் நடைமுறை சாத்தியமான எந்த விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்படவில்லை. நாட்டு மக்களை மீண்டும் ஒருமுறை வரிசை யுகத்திற்கு உள்வாங்கும் வகையில் செயற்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
2021ஆம் ஆண்டின் பின்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை தற்போது 1700 ரூபாவாக அதிகரித்துள்ளார்.
செப்டெம்பர் 10ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் கிடைக்கப்பெறும்.
மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதாவது மலையக மக்கள் முன்னணியின் இராதாகிருஸ்னண் மற்றும் உதயகுமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
செப்டெம்பர் 10ஆம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களின் கைகளில் 1700 ரூபா சம்பளம் கிடைத்தவுடன், அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்காக வெளியேறுவார்கள் என்றார்.