தேர்தலுக்கு முன்னே பிரதமர் பதவிக்கு போட்டி : மோதிக்கொள்ளும் சஜித் கட்சியின் அரசியல்வாதிகள்


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்துமபண்டாரவின் பெயரும், கண்டி மாவட்ட எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயரும் தற்போது வரையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

சஜித் வெற்றி பெற்றால் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார பிரதமராக வேண்டும் என கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மற்றுமொரு குழு உறுப்பினர்கள் கிரியெல்லவிற்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இதேவேளை, இவர்கள் இருவருக்குமிடையே தேவையற்ற போட்டி ஏற்பட்டால், இந்த பதவி மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேநேரம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட அறிக்கையொன்றை  இலங்கை தமிழரசுக் கட்சி நாளை வெளியிடவுள்ளது.

வவுனியாவில் குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதன்பின்னர், ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் குழு கடந்த வாரம் கூடியிருந்தது.

இதன்போது, சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஆராயப்பட்டிருந்து.

அதன்படி சஜித் பிரேமதாசவை, இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரிப்பதற்கான காரணங்கள் அடங்கிய விசேட அறிக்கையொன்று நாளை வெளியிடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.