புடினின் போர் நிறுத்த உத்தரவு - ரஷ்ய துருப்புக்கள் அத்துமீறி தாக்குதல்


உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி 36 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார்.

உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக நண்பகல் முதல் நாளையதினம் (07-01-2023) நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஷ்ய துருப்புக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புடினின் போர்நிறுத்த உத்தரவை மீறி கிழக்கு உக்ரைனில் ரஷ்ய துருப்புக்கள் தாக்குதல் நடத்தி உள்ளன.

போர்நிறுத்தம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் நேரத்திற்குப் பிறகு கிழக்கு உக்ரைனில் உள்ள முன்னணி நகரமான பாக்முட்டில் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பாக்மூட்டில் இருந்தும் எதிர்தரப்பினரை நோக்கி ஷெல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கிராமடோர்ஸ்க் மீதும் ரஷ்ய துருப்புக்கள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் நிர்வாகத்தின் துணைத் தலைவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்ததாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.