பஞ்சாப் அணி வரலாற்று வெற்றி : கொல்கத்தாவை பந்தாடிய ஜோனி பேர்ஸ்டோ-ஷசாந்த் சிங் ஜோடி!


ஐபிஎல் 2024 தொடரின் 42வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பந்துவீச்சில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறியதால், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ஓட்டங்கள் அபாரமாக குவித்தனர்.

கொல்கத்தா அணியின் பில் சால்ட் 75 ஓட்டங்களையும் மற்றும் சுனில் நரைன் 71 ஓட்டங்களையும் விளாசி அணியின் தொடக்கத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.

அதே சமயம் வெங்கடேஷ் ஐயர் 39 ஓட்டங்களையும் , ஷ்ரேயஸ் ஐயர் 28 ஓட்டங்களையும்  மற்றும் ரஸல் 24 ஓட்டங்களையும்  குறைந்த பந்தில் சேர்த்து அணியின் ஓட்டங்களை மேலும் வலுப்படுத்தினர்.

பின்னர், 262 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரோசவ் தன்னுடைய பங்கிற்கு 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் குவித்து விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த ஜோனி பேர்ஸ்டோ மற்றும் ஷசாந்த் சிங் கொல்கத்தா அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர்.

பஞ்சாப் அணி வீரர் ஜோனி பேர்ஸ்டோ, 48 பந்துகளில் 108 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றினார். அவர் தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களை விளாசினார்.

மறுபுறம், ஷசாந்த் சிங் 28 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி வெற்றிகரமாக துரத்தி பிடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இது என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்தது.

இதேநேரம் இருபதுக்கு20 போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்கள் அடிக்கப்பட்ட போட்டியாக நேற்றைய போட்டி பதிவானது.

இந்த போட்டியில் மொத்தமாக 42 ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.