பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் ஆரம்ப சுற்று போட்டி விபரம் வெளியாகியுள்ளது. இதன்படி இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (27) நடைபெறவுள்ளது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு பூப்பந்து போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொள்ளும் விரேன் நெத்தசிங் ஆரம்ப சுற்றுப் போட்டியில் அன்றைய தினத்தில் பங்கேற்கவுள்ளார்.
தொடர்ந்து பெண்களுக்கான 100 மீற்றர் பாக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் கங்கா செனவிரத்ன எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி ஆரம்ப சுற்றி பங்கேற்கவிருப்பதோடு ஆண்களுக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல் ஆரம்ப சுற்றுப் போட்டியில் கைல் அபேசிங்க ஜூலை 30 ஆம் திகதி கலந்துகொள்வார். ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் மத்திய தூர ஓட்ட வீராங்கனை தரூஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆரம்ப சுற்றில் ஓகஸ்ட் 2 ஆம் திகதி போட்டியிடவுள்ளார்.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 11.15 இற்கு நடைபெறுள்ளது.
இலங்கை சார்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷண பங்கேற்கவுள்ளார். அவரது ஆரம்ப சுற்றுப் போட்டி ஓகஸ்ட் 04 ஆம் திகதி இரவு 10.35 இற்கு நடைபெறவுள்ளது.
டில்ஹானி லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் ஆரம்ப சுற்றில் ஓகஸ்ட் 07 ஆம் திகதி பங்கேவுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 26 தொடக்கம் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.