மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், நாட்டில் நேற்றைய தினம் (11) அறிவிக்கப்பட்ட 15வீத மின்சார கட்டண உயர்வை கடுமையாக எதிர்ப்பதாகவும், இது நியாயமற்றது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நியாயமான செலவுத் தொகை என்ற கொள்கையை சரியாக பின்பற்றியிருந்தால், இந்த உயர்வு சாத்தியமே இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 15 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முடிவை எங்களது சங்கம் வலுவாக எதிர்ப்பதுடன் எதிர்வரும் நாட்களில் மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.
இதன்படி, மின்சார சபை  களவாடப்பட்ட, தவறான தரவுகளை பயன்படுத்தி அதிக செலவுகளை சுட்டிக்காட்டி கட்டண உயர்வை நியாயப்படுத்த முயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு நாட்டின் நலனுக்கோ, மக்களின் நலனுக்கோ அல்ல எனவும் இது சர்வதேச நாணய நிதியத்தின்  அழுத்தத்தால் எடுக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, மின்சார கட்டணத்தை 33வீத குறைக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் கூட வழங்கக்கூடிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            